மகாபாரதம்-8 (தமிழ்)
மகாபாரதம்-8 (தமிழ்)

கம்பர் மிக நிதானமாய்த் திருமணக் காட்சிகளை வர்ணிக்கின்றார். மிக மிக நிதானமாய் ஒவ்வொரு காட்சியாக வர்ணித்து விட்டுப் பின்னர் திருமணத்திற்கு வருகின்றார். அந்த மாதிரியாகவே வால்மீகியும் திருமண வைபவங்களை விவரிக்கின்றார். இன்னும் சொல்லப் போனால் குலம், கோத்திரம் போன்ற வர்ணனைகள் நிறையவே வருகின்றன. பெரும்பாலான இந்துத் திருமணங்களில் சொல்லப் படும் பாட்டன், முப்பாட்டன் வரிசையும் சொல்லப் படுகின்றது. “கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால், எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார்” என்று கம்பர் சுருக்கமாய் முடித்து விட்டார் என நினைத்தோ என்னமோ அருணகிரிநாதர் தன் திருப்புகழில் வில் முறியும் காட்சியைக் கொஞ்சம் விஸ்தாரமாய் வர்ணிக்கின்றார்.வில் உடையும் ஓசையைக் கூட வர்ணிக்கின்றார். “சிலை “மொளுக்”கென முறிபட” என்ற வார்த்தை மட்டும் நினைவில் இருக்கிறது. மன்னிக்கவும், பூராப் பாடலையும் தேடிக் கொண்டிருக்கிறேன். நேரமின்மையால் கிடைத்ததும் போடுகின்றேன். திருவிடைக்கழி திருப்புகழில் இருக்குனு நினைக்கிறேன்.
கம்பர் “ஆர்த்தன பேரிகள் ஆர்த்தன சங்கம் ஆர்த்தன நான்மறை ஆர்த்தனர் வானோர் ஆர்த்தன பல்கலை ஆர்த்தன பல்லாண்டு ஆர்த்தன வண்டு இனம் ஆர்த்தன வேலை” (பால காண்டம் 1199)
என மங்கல ஆரவாரம் செய்வதோடல்லாமல், கைகேயி முதலிய மூவரையும் ராமரும், சீதையும் வணங்குவதாயும் தெரிவிக்கின்றார்.
“கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம் தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி ஆய தன் அன்னை அடித் துணை சூடி தூய சுமித்திரை தாள் தொழலோடும்”
என்று கூறுகின்றார் பால காண்டம் 1200 பாடலில் கம்பர்.
வால்மீகி ராமாயணத்திலோ தசரதனின் மூன்று மனைவிகளும் திருமணத்திற்கு வருவதே இல்லை. இன்றும் சில வட இந்தியத் திருமணங்களில் பெரும்பாலும் மணமகனின் தாய், தன் மகன் திருமணத்துக்குச் செல்லுவது இல்லை, என்பதைக் கட்டாயமாய்க் கடைப்பிடிக்கின்றனர்.
திருமணங்கள் முடிந்ததும் மணமக்கள் அனைவரும் அயோத்திக்குத் திரும்புகின்றனர். செல்லும் வழியில் சகுனங்கள் சரியில்லாமல் அபசகுனங்களாய்த் தெரிய தசரதனின் மனம் கலங்குகின்றது. வரப்போவதை நினைத்தோ? என்ன காரணம் என வசிஷ்டரை மன்னன் வினவ, வசிஷ்டரோ பரசுராமர் வருகை புரிவதாய்த் தெரிவிக்க மன்னன் அஞ்சுகிறான் என்ன நேருமோ என! பரசுராமரும் வருகின்றார். எப்படி?
பூமி தேவியே அதிரும்போன்றதொரு சத்தத்துடன், வானத்தில் சூரியன் கூட அஞ்சி மறையும் வண்ணம், திசைகள் தடுமாறும் வண்ணம் தோன்றினார் எதிரே ஒரு முனிவர். அவர் தோற்றத்தில் அச்சத்தை உண்டாக்கும் விதத்திலும், நெருப்பைப் போல் யாராலும் அணுகமுடியாத தன்மையுடனும், தோளில் கோடரியைச் சுமந்து கொண்டும் இருந்தார். முப்புரத்தையும் எரித்த சிவனின் வடிவமோ என்னும் எண்ணத்தைத் தோற்றுவித்த அவர் தான் பரசுராமர் என்னும் முனிவர். ப்ருகு முனிவரின் வம்சத்தில் தோன்றிய ஜமதக்னியின் புத்திரன் ஆன அவர் தன் தகப்பனைக் கொன்ற கார்த்த வீர்யாச்சுனனைப் பழி வாங்க ஆரம்பித்து அதில் இருந்து ஆரம்பித்து 21 முறை க்ஷத்திரியர்களைத் தொடர்ந்து அழித்து வரவும், க்ஷத்திரியர்கள் இல்லாமல் பூமியில் சமானத் தன்மை ஏற்படாது, என்பதை நன்கு உணர்ந்த காசியபர் பரசுராமர் வென்ற பூமி முழுதையும், தான் தானமாய்ப் பெற்று, இந்தப் பூமியில் நல்லாட்சி புரிந்து வருமாறு கூறி எஞ்சிய சில க்ஷத்திரியர்களுக்குக் காசியபர் பூமியை அளிக்கின்றார். என்றாலும் பரசுராமரின் கோபம் அடங்காமலேயே அவர் மீண்டும் மகேந்திரமலையை அடைந்து தவம் செய்து வந்த போது, ஸ்ரீராமர் சிவ தனுசுவை உடைத்த விபரம் தெரிந்து கொண்டு அவரிடம் வந்து, தன்னிடம் இருக்கும் இன்னொரு வில்லைக் காட்டுகின்றார். அது விஷ்ணு தனுசு. விஸ்வகர்மாவால் செய்யப் பட்ட அதி அற்புத விற்கள் இரண்டில் ஒன்று சிவனிடமும், மற்றது விஷ்ணுவிடமும் இருந்தது. சிவன் தன் வில்லை மிதிலை அரசனுக்கு அளிக்க விஷ்ணுவோ ப்ருகு வம்சத்து ரிசீகருக்கு அளிக்க அவரிடமிருந்து ஜமதக்னி முனிவர் பெற்றுப் பின்னர் பரசுராமரை வந்தடைகின்றது.
ஸ்ரீராமரைப் பார்த்துப் பரசுராமர் நீ முறித்த வில்லுக்குச் சமானம் ஆன இந்த வில்லையும் நீ நாண் ஏற்றிக் காட்டுவாயாக! இல்லை எனில் என்னுடன் நீ யுத்தம் செய்யவேண்டும்!” என்று கூற ஸ்ரீராமரும் உடனேயே குழந்தை தன் விளையாட்டுப் பொருளை அசிரத்தையாக எடுப்பது போல், அந்த வில்லை எடுத்து நாண் ஏற்றிவிட்டு, “அடுத்து என்ன செய்யவேண்டும்” என்று பரசுராமரைக் கேட்கின்றார். பரசுராமரோ மனம் மகிழ்ந்து,,”ஏராமா! செயற்கரிய செயலைச் செய்த நீ அந்த சாட்சாத் விஷ்ணுவே தான்! நான் காச்யபருக்குத் தானமாய் அளித்த இந்தப் பூமியில் ஓரிடத்தில் தங்காது நிலையில்லாது சுற்றிக் கொண்டே இருப்பதாய் வாக்களித்திருக்கின்றேன். இப்போது நான் மீண்டும் மகேந்திர மலைப்பகுதிக்கே செல்கின்றேன். இந்த வில் இனி உன்னுடையது!” என்று சொல்லிச் செல்கின்றார்.அதன் பின்னர் அனைவரும் அயோத்தியை வந்தடைய மணமக்களுக்கு அயோத்தி மக்கள் ஆரவார வரவேற்பு அளித்ததும் கழிகின்றது பனிரண்டு வருடங்கள் நிம்மதியாக. இங்கே பால காண்டத்தைச் சுருக்கமாய் முடித்துவிட்டு அயோத்யா காண்டத்துக்குச் சென்று விடுகின்றார் அருணகிரிநாதர். ஜானகியான சீதையின் அன்பிலும், பொறுமையில் ஒன்றாய்க் கலந்த ராமன் என அவர் வர்ணிப்பதாய் அறிகின்றோம். நாளைக்குள் பாடலைத் தேடி எடுத்து விடுகின்றேன்.
தொடரும்..
http://pillaiyar.mazhalaigal.com/ramayan/ramayan-010.php

அதிலிருந்து அந்த வில் ஜனகரின் குடும்பத்திலேயே இருந்து வருகின்றது. இது இவ்வாறிருக்க ஜனகர் மேலும் தொடர்கின்றார்:”முன்பொரு முறை யாகம் செய்வதற்காக நிலத்தை நான் உழுது கொண்டிருந்த சமயம் அந்த நிலத்தில் இருந்து ஒரு பெண் தோன்றினாள். எந்தக் கர்ப்பத்திலும் வசிக்காமலேயே பிறந்த அந்தப் பெண்ணை என் பெண்ணாக நான் ஏற்றுக் கொண்டேன் அவளுக்குத் திருமணப் பருவம் வந்து விட்டது. ஆகவே இந்த சிவ தனுசை எவர் கையில் எடுத்து நாணேற்றுகின்றார்களோ அவர்களுக்கே என் பெண்ணாகிய இந்தச் சீதையை மணமுடித்துத் தரப் போவதாய் அறிவித்துள்ளேன். இந்த ராமர், இந்த வில்லை எடுத்து நாணேற்றுகின்றாரா எனப் பார்க்கலாம். இதுவரையிலும் பல தேசத்து மன்னர்களும், தேவாதி தேவர்களும், வந்து இந்த வில்லை நாணேற்ற முயன்று பார்த்து விட்டார்கள். எவராலும் முடியவில்லை.மனித சக்திக்கு அப்பாற்பட்டதான இந்த வில்லில் நாணேற்றுவது ராமனால் முடியுமா என்பது சந்தேகமே, ராஜகுமாரர்கள் இந்த வில்லைப் பார்க்கட்டும்” என்று சொல்லவே நூற்றுக் கணக்கான வீரர்கள் வில் வைக்கப் பட்டிருந்த பெட்டியை இழுத்துக் கொண்டு வந்து சேர்த்தனர்.
விசுவாமித்திரரும், ஜனகரும் சம்மதம் தெரிவிக்க மிகச் சாதாரணமாக ஒரு விளையாட்டுப் போல் அந்த வில்லைக் கையில் எடுத்த ராமர் அதன் நாணை ஏற்றும் போது வில் பலத்த சத்தத்துடன் முறிந்து விழுந்தது. எட்டுத் திசைகளும், மலைகளும், நெருப்பைக் கக்கும் எரிமலைகளும், ஆறுகளும், சமுத்திரங்களும் ஒரு க்ஷணம் தங்கள் போக்கை நிறுத்திக் கொண்டதாய்த் தோன்றியது. பின்னர் சுதாரித்துக் கொண்ட ஜனகர் மிகுந்த சந்தோஷத்துடன் ராமருக்குத் தன் பெண்ணாகிய சீதைத் தர இசைகின்றார். உடனேயே ஜனகரின் மந்திரி பிரதானிகளால் அயோத்திக்குச் செய்தி சொல்ல ஆட்கள் தயார் செய்யப் பட்டனர். அயோத்திக்குச் சென்ற அவர்கள் தசரதனிடம் விஷயத்தைச் சொல்ல தசரதனும் மனம் மகிழ்ச்சியுடனேயே அதை ஏற்றுக் கொண்டு அயோத்தியில் இருந்து தன் பரிவாரங்கள் புடை சூழ மிதிலை புறப்படுகின்றான். ஜனகரைக் கண்டு பேசுகின்றான். தன் குல குருவான வசிஷ்டரை முன்னிறுத்திக் கொண்டு தசரதன் பேசும் போது ஜனகரும் தன்னுடன் தன் பரிவாரங்கள் மட்டுமின்றித் தன் தம்பியான குசத்வஜனையும் உடன் அழைத்துக் கொள்கின்றார். பின்னர் தசரதனிடம் ராமனுக்கு, சீதையையும், லட்சுமணனுக்கு த் தன் வயிற்றில் பிறந்த பெண்ணான ஊர்மிளையையும் திருமணம் செய்து தருவதாய்ச் சொல்கின்றார். இதைக் கேட்ட விசுவாமித்திரர் உடனேயே ஜனகரிடம் உன் தம்பியின் மகள்களான மாண்டவியையும், ச்ருதகீர்த்தியையும் முறையே பரதனுக்கும், சத்ருக்கனனுக்கும் திருமணம் செய்விக்கும்படிச் சொல்லத் தன் தம்பியையும் கலந்து ஆலோசித்த ஜனகர் அதற்குச் சம்மதம் தெரிவிக்கின்றார். பின்னர் நான்கு திருமணங்கள் இந்த ஏற்பாட்டின்படி நடக்கின்றது. திருமணம் நடைபெறும் வரை ராமனோ, சீதையோ ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே இல்லை என்பதே வால்மீகி சொல்வது. ஆனால் கம்பரோ என்றால் “மிதிலைக் காட்சிப் படலம்” 519-ம் செய்யுளில் இவ்வாறு கூறுகின்றார்.கம்பர் கூற்றுப் படி ராமன் கன்னிமாடத்தில் இருக்கும் சீதையைக் கண்டு அவள் யாரெனத் தெரியாமலேயே காதல் கொள்ளுகின்றான். சீதையும் அவ்வாறே காதல் கொள்கின்றாள்.
“எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.
நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன
வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும்
தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே!”
மனதால் எண்ணிப் பார்க்கவும் முடியாத பேரழகே பெண்ணாய் உருவெடுத்த சீதையைக் கன்னிமாடத்தில் நிற்கும்போது கண்ட ராமனின் விழிகளோடு சீதையின் விழிகளும் மோத, இருவரும் ஒருவரை ஒருவர் விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டதோடல்லாமல் இருவரது அறிவும் ஒரு நிலையிலும் இல்லை. கூர்மையான வேல் போன்ற கண்களை உடைய சீதையின் பார்வையானது ராமனின் தோள்களில் தைக்கின்றது. மிக மிக ஆழமாய்த் தைத்தது. அதே போல் ராமனின் பார்வையும் சீதையின் மார்பில் பட்டுப் பதிந்தது. சீதை வால்மீகி ராமாயணத்திலும் சரி, மற்ற ராமாயணங்களிலும் சரி, ராமனைத் தவிர மற்றவரை நினைத்தது கூட இல்லை. ஒரு பெண் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாகாவே சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றாள், அதற்காகத் தான் எந்தவிதத் தியாகமும் செய்யத் தயாராகவே இருப்பதாயும் தெரிவிக்கின்றாள். தியாகமும் செய்கின்றாள். முதலில் கணவனுக்கு வந்த ராஜ்ய பதவியைத் துறந்து காட்டுக்குச் செல்லும்போது அவனுடனேயெ செல்கின்ற போதும் சரி, பின்னர் வந்த நாட்களில் கணவனின் அடி ஒற்றி நடந்த போதும் சரி, ராவணனால் பலாத்காரமாய்த் தூக்கிச் செல்லப் பட்ட போதும் சரி, பின்னர் அங்கே ராமஸ்மரணையோடே இருந்த போதும் சரி, பின்னர் ராமனால் ராவணன் வதம் செய்து வந்தபின்னர், ராமனால் அக்னிப்ரவேசம் செய்யும் படிப் பணிக்கப் பட்டபோதும் பின்னர் ராமன் அவளைத் துறந்த போதும் ஒரு கணமும் அவள் தன் கணவனைக் குறை கூறவில்லை. தூற்றவில்லை. கணவன் சொல்வதைச் செய்வதே தன்னுடைய தர்மம், என்றும் அதுவே கணவனுக்குச் செய்யும் உதவி எனவும் எண்ணினாள். ஆனால் சீதையும் ராமனை எதிர்த்து வாதாடியும் இருக்கின்றாளே? கொஞ்சம் பொறுத்தால் தெரியும்.
தொடரும்..
http://pillaiyar.mazhalaigal.com/ramayan/ramayan-009.php